தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாக அசோகன் என்ற பெயரில் தங்க நகை கடைகள் செயல்பட்டு வந்தன. இங்கு நகைகளுக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு மூலம் வீட்டு மனை பட்டா, நகைகள் வாங்க, விற்க என பல்வேறு திட்டங்களை கூறி பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது.
வங்கியில் ஏலத்திற்கு சென்ற நகைகளை மீட்டுத் தருவதாகவும், சிறு சிறு நகைகளை புதிதாக மாற்றித் தருவதாகவும் கூறி மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் அசோகன் நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் இங்கு நகைச்சீட்டு உட்பட பல வகையிலும் பணம் மற்றும் நகை கொடுத்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் தஞ்சையில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் அசோகன் நகைக்கடையில் பணம் கட்டி ஏமாந்த 50க்கும் அதிகமானோர் கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் ஒரு மனுவை அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
அசோகன் நகைக்கடையால் பாதிக்கப்பட்ட நாங்கள் தஞ்சை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்து இருந்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களின் பணம், நகை திரும்ப கிடைக்க செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.