ஆருத்ரா கோல்ட் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது . போலீஸ் விசாரணையில் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே. சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நடிகர் ஆர். கே. சுரேஷ் உட்பட நான்கு பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு எதிராக நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அத்துடன் தான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதாக உறுதி அளித்தார். இதையடுத்து இரண்டு நாள்களுக்கு முன் துபாயில் இருந்து சென்னை வந்த நடிகர் ஆர்.கே சுரேஷிடம் விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில், நீண்ட காலமாக தலைமைறைவாக இருந்த தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். தான் தலைமறைவாகவில்லை. விசாரணைக்கு ஆஜராகிவிட்டு செய்தியாளர்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.