அருந்ததி’ படத்தில் நடிகை அனுஷ்கா நெற்றியில் பெரிய பொட்டோடு தலைவிரி கோலத்தோடு ஆங்காரமாக இருக்கும் காட்சியை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். கிட்டத்தட்ட அதேபோன்று ஆங்காரமாக ஹன்சிகா இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப் படம் அவர் நடித்திருக்கும் ‘காந்தாரி’யில் இருந்து வெளியாகி இருக்கிறது. கமர்ஷியல் படங்களின் கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா, திருமணத்திற்குப் பிறகு கதாநாயகியை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் ’கண்டேன் காதலை’, ‘ஜெயம் கொண்டான்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய ஆர். கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காந்தாரி’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

கமர்ஷியல் கலந்த ஹாரர் டிராமாவாக படத்தை இயக்குநர் உருவாக்கி வருகிறார். இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். பொக்கிஷங்களைத் தேடிச் செல்லும் அவருக்கு, அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.

இந்து அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நரிக்குறவப் பெண் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஹன்சிகா. நரிக்குறவப்பெண்ணாக நடிப்பதற்காக சிறப்புப் பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டுள்ளார். இப்படத்திற்காகச் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் 60 லட்சம் ரூபாயில், ஒரு பிரம்மாண்டமான மலைக் குகை அமைத்து, 1943 ல் நடக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்கியுள்ளது படக்குழு. இந்தப் படத்தைத் தான் மிகவும் எதிர்பார்த்துள்ளதாக ஹன்சிகா கூறியுள்ளார்.