பெரம்பலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு தொகுதி முழுவதும் சுறாவளி பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து உதயசூரியனுக்கே வாக்களிப்போம் என்று உறுதி அளித்தனர். கிராமங்கள்தோறும் மக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் வேட்பாளர் அருண் நேருவை வாழ்த்தினர்.
அருண்நேருவை ஆதரித்து திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 22ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அமைச்சர் நேரு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திண்டுக்கல் லியோனி, திருச்சி சிவா உள்பட கூட்டணி கட்சித்தலைவர்கள் அருண்நேருவை ஆதரித்து வாக்கு சேகரித்தனர்.
தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைவதால், வேட்பாளர் அருண்நேரு இன்று காலையிலேயே மின்னல்வேக பிரசாரத்தை தொடங்கினார். இன்று அவர் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கி வாக்கு சேகரிக்கிறார். காலை 7 மணிக்கு அவர் லால்குடி ரவுண்டானாவில் பிரசாரத்தை தொடங்கினார். வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் நேரு பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
தொடர்ந்து மாந்துரை, வாளாடி, தாளக்குடி ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்றவாறு ஆதரவு திரட்டினார். வேட்பாளருடன் அமைச்சர் நேரு, மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, லால்குடி எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
காலை 8.30 மணி அளவில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் வாக்கு சேகரிப்பை தொடங்கினார். தொடர்ந்து சமயபுரம் 4 ரோடு, மண்ணச்சநல்லூர் கடைவீதி, நொச்சியம், அய்யம்பாளையம் ஆகிய இடங்களில் திறந்த வாகனத்தில் சென்றவாறு வாக்கு கேட்டார்.
காலை 10 மணிக்கு மேல் முசிறி சட்டமன்ற தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். முசிறி, உமையாள்புரம், செவந்திலிங்கபுரம், வெள்ளூர், திரணியாம்பட்டி, ஆணைப்பட்டி, தொட்டியப்பட்டி, மாங்கரைப்பேட்டை ஆகிய இடங்களில் அவர் வாக்கு சேகரிக்கிறார்.
பின்னர் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார். குளித்தலை சுங்க கேட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் திமுக வேட்பாளர் அருண் நேரு,காவேரி நகர், பெரியபாலம், பஜனை மடம், குளித்தலை பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பிற்பகல் 3.15 மணி அளவில் துறையூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் அருண் நேரு, கண்ணனூர், துறையூர்(முசிறி பிரிவு ரோடு), பஸ் நிலையம், பாலக்கரை, சிலோன் ஆபீஸ், பெருமாள்மலை அடிவாரம் ஆகிய இடங்களில் உதயசூரியனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
மாலை 4.40 மணிக்கு பெரம்பலூர் கனரா வங்கி அருகில் ஆதரவு திரட்டும் அருண் நேரு, அம்பேத்கர், காந்தி, பெரியார் சிலைகள் அருகே வேனில் நின்றவாறு ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, ஆகிய இடங்களில் உதயசூரியனுக்கு வாக்கு சேகரிக்கும் அருண் நேரு, மாலை 5.30 மணி அளவில் பெரம்பலூர் பாலக்கரையில் கலெக்டர் அலுவலக வளைவு அருகே ஆதரவு திரட்டி பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
ஒரே நாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொகுதி முழுவதும் அவர் மின்னல் வேகத்தில் ஆதரவு திரட்டுகிறார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் திரண்டு நின்று எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே என வாக்குறுதி அளித்து அருண் நேருவுக்கு அமோக ஆதரவு அளித்தனர். வாக்காளர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் அமோக ஆதரவால் அவர் இன்றைய இறுதிக்கட்ட பிரசாரத்தை செய்து வருகிறார். வேட்பாளருடன் அமைச்சர் நேரு மற்றும் எம்.எல்.ஏக்கள் கதிரவன், காடுவெட்டி தியாகராஜன், மாணிக்கம், பிரபாகரன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிள் திரளாக பங்கேற்றனர். தொண்டர்கள் இரு சக்கர வாகனத்தில் அணிவகுத்து வந்தனர்.