திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட துறையூர் பகுதியிலுள்ள பச்சமலையில் சின்ன இலுப்பூரைச் சேர்ந்த ம. ரோகிணி(17) ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி தமிழக அளவில் பழங்குடியினர் பிரிவில் முதல் மதிப்பெண் 73.8 % பெற்று மத்திய அரசு கல்வி நிறுவனமான திருச்சி என்ஐடிடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார்.
இத் தகவலறிந்த பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக எம்பியும் அமைச்சர் கே.என்.நேருவின் மகனுமான அருண்நேரு மாணவி ரோகிணியை நேரில் சந்தித்து புதிய லேப்டாப் கணிணியும், ஊக்கத்தொகையும் வழங்கி பாராட்டினர்.
அப்போது அவர் மாணவி ரோகிணி தனது சாதனையை உணராதவராக காணப்படுகிறார். அவர் பச்சமலை வாழ் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டுள்ளார். இது போன்று சாதிக்கும் அடித்தட்டு பிள்ளைகளை திமுக அரசும், திமுக நிர்வாகிகளும் ஊக்கப்படுத்தி பாராட்டுவர். ரோகிணியைப் போல பலரை உருவாக்க திராவிட மாடல் திமுக அரசு எப்போதும் செயல்படும் என்றார்.
எம்.பி. அருண் நேருவுடன் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் ஒன்றியக்குழுத் தலைவர் சரண்யா மோகன்தாஸ், துறையூர் நகர்மன்றத் துணைத் தலைவரும் நகர திமுக செயலாளருமான முரளி, துறையூர் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாத்துரை, வீரபத்திரன், இளைஞரணி கிட்டப்பா உள்ளிட்ட பலர் அப்போது உடனிருந்தனர்.