பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் உள்ளது பெரிய ஏரி. 300 ஏக்கா் பரப்பு கொண்டது. ஒரு முறை நிரம்பினார் சுமார் 2500 ஏக்கர் நெல் சாகுபடியாகும் அளவுக்கு இதில் நீர் தேங்கும். வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் சுற்றிலும் உள்ள மலைப்பகுதிகளில பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரே இந்த பெரிய ஏரியின் மதகு பகுதியில் கசிவு ஏற்பட்டு நீர் வெளியேறிக்கொண்டிருந்தது. இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து உள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக அதிகமாக
ஏரிக்கு நீர் வந்ததால் இன்று காலை ஏரியின் மதகு பகுதியில் உடைப்பெடுத்தது.
சிறிது நேரத்தில் உடைப்பு பெரிதாகி வயல்களுக்குள் வெள்ளம் பாய்ந்தது. இதில் சுமார் 500 ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை நோக்கி பாய்கிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.