Skip to content
Home » ஆருத்ரா ரூ.2438 கோடி மோசடி….. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

ஆருத்ரா ரூ.2438 கோடி மோசடி….. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

  • by Senthil

அதிக வட்டி ஆசை காட்டி மக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்த நிதி நிறுவனங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தன. அதில் அதிகளவில் முதலீட்டாளர்களை கவர்ந்து சுமார் 2438 கோடி மோசடி செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆருத்ரா நிதி நிறுவனம்.ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.

இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த வழக்கில் 6 கம்பெனிகள் மற்றும் முக்கிய ஏஜென்ட்டுகள் என மொத்தம்16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக, ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், பாஜகவின் நிர்வாகியுமான இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியான ஹரீஸை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஆருத்ரா நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியான ரூசோ என்பவரையும் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியபோது தான், இந்த மோசடியின் பின்னணியில் வில்லன் நடிகரான ஆர்.கே.சுரேஷூக்கும்  தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆர்.கே.சுரேஷூம் பாஜக நிர்வாகிதான். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஹரிஸ், 11 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

இதில்தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரீஸ் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 84 கோடி ரூபாயை, ஆருத்ரா நிறுவனத்திற்காக பெற்றுள்ளதும், அவருக்கு சுமார் 130 கோடி ரூபாய் ஆருத்ரா நிறுவனத்திலிருந்து தரப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும், ஹரீஸ் தன் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது மட்டுமல்லாமல், தனக்கு சொந்தமாக ஒன் மேன் குரூப்ஸ் என்ற பெயரில் தொழில்களை நடத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது. ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக ஹரீஸ் இருந்தபோது, பா.ஜ.க வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் மாநில செயலாளராக இருந்து வந்தார். இந்த கட்சிப் பதவியைப் பெறுவதற்காக, அக்கட்சியை சேர்ந்த சில நபர்களுக்கு, ஆருத்ரா முதலீட்டாளர்களின் பணத்தை கொடுத்தது பற்றியும் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக சார்பாக ஹரீஸிடம் இருந்து பணத்தை வாங்கியது யார்? இந்தக் கேள்விக்குத்தான் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை பா.ஜ.க மாவட்ட பொறுப்பில் உள்ள டாக்டர்.சுதாகர் ஆகியோரின் பெயரைச் சொல்லியிருக்கிறார் ஹரீஸ். இவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகக் கோரி, பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இவர்கள் விசாரிக்கப்படும் பட்சத்தில்தான், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது வெளிச்சத்திற்கு வரும். வரும் தமிழ் புத்தாண்டு அன்று திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். ஆனால் ஆருத்ரா நிதி நிறுவனம் மூலம் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த விவகாரத்தில், சொந்த கட்சியினரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால், அதனை அண்ணாமலை எப்படி சந்திக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!