Skip to content
Home » அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி மற்றும் சமத்துவபுரம் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் விண்ணப்பம் செய்தவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடாசலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் இன்று கள ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில், 2024 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கத் திருத்தத்தில் ஒரு பகுதியாக 27.10.2023 முதல் 09.12.2023 வரை பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்கள் பெறப்பட உள்ளது. 27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி ஆண்கள், 2,53,534 நபர்களும், பெண்கள் 2,53,880 நபர்களும் இதர வாக்காளர்கள் 11 நபர்களும் ஆக மொத்தம் 5,07,425 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 18.11.2023, 19.11.2023, 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் மாவட்டத்திலுள்ள 596 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. மேற்படி சுருக்கத் திருத்த

முகாம் மற்றும் இணையதளம் வாயிலாக படிவம் 6- 9525, படிவம் 7 – 768, படிவம் 8- 3555 ஆக மொத்தம் 13,848 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மேற்படி விண்ணப்பங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் (BLO App) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி சிறப்பு சுருக்கத் திருத்தம் -2024 ல் பெறப்பட்ட 13,848 விண்ணப்பங்களில் 10,428 விண்ணப்பங்கள் ஏற்பும், 106 விண்ணப்பங்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 3314 விண்ணப்பங்கள் நடவடிக்கையில் உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு வகுப்பினர் (PVTGs) மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர்களை விடுதலின்றி சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இளம் வாக்காளர்களை சேர்;க்க கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 30.11.2023 அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு கல்லூரிகளில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேரணி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்ற பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேர்தல் கல்வி குழுமம் மூலம் நடத்தப்பட்டு வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி மற்றும் சமத்துவபுரம் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் விண்ணப்பம் செய்தவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடாசலம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் கள ஆய்வு மேற்கொண்டு அவர்களின் வயது, முகவரி ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் கருத்துக்கள், தேவைகள் குறித்து கேட்டறிந்து வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், மேலும், சிறப்பு சுருக்க முறை திருத்தம் -2024 18 வயது நிறைவடைந்தவர்கள் 09.12.2023 (சனிக்கிழமை) வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணைய வழியாகவோ அல்லது நேரிலோ வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் பூர்த்தி செய்த படிவங்களை வழங்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும் தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடாசலம் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன்(அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்) வட்டாட்சியர் (தேர்தல்) வேல்முருகன், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!