காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில், திருமானூர் ஒன்றியம், குலமாணிக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், 2024-25 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணி விவரம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், சத்துணவுத்திட்டம் மற்றும் முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களின் தற்போதைய நிலைகள் குறித்தும், சுகாதாரத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் பயன்பெறுவது குறித்தும் எடுத்துரைக்கபட்டது. கிராம ஊராட்சிகளில் நிர்வாகத்தில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்பதே கிராம சபையின் நோக்கமாகும். மாற்றுத்திறனாளிகளின் கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகள் எவரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணிகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கால்வாய் தூர்வாருதல், வரத்து கால்வாய்கள் தூர்வாருதல் போன்ற முக்கியமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே கிராம சபைக் கூட்டங்களின் வாயிலாக பொதுமக்கள் கிராமத்தின் தேவைகளை முடிவு செய்து அதனை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தினார்.
முன்னதாக எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில், அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கவிதா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, திருமானூர் ஒன்றியக் குழுத்தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, வட்டாட்சியர் முத்துலெட்சுமி, குலமாணிக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் பட்டு ஜெயசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.