அரியலூரில் சிட்டா அடங்கள் நகலை கொடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் காலம் தாழ்த்துவதோடு லஞ்சம் கேட்பதாக இன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டி கூச்சலிட்டனர். அப்பொழுது லஞ்சம் கேட்பவர்கள் குறித்து விவரம் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறிய நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் லஞ்சம் கேட்பதாகவும் அனைத்தும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்த போதும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் கொடுப்பதற்கு விவசாயிகளிடம் கிராம நிர்வாக அலுவலர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அரியலூர் மாவட்டம் திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலராக பொற்செல்வி பணிபுரிந்து வருகிறார் . இவர் விவசாயிகளிடம் சிட்டா அடங்கல் வாங்க சென்றவர்களிடம் ரூபாய் ஆயிரம் லஞ்சமாக கேட்ட வீடியோ வைரலாக பரவியதின் அடிப்படையில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் விஏஓ பொற்செல்வியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.