அரியலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றிய குழு கூட்டம், தலைவர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. ரூ. 63 லட்சம் செலவினங்களுக்கான தீர்மானம் கூட்டத்தில் வைக்கப்பட்டது. அப்பொழுது ஒன்றியக் குழு உறுப்பினர்கள், உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்தந்த பகுதிகளில் மக்கள் நலத் திட்டங்களை செய்ய வேண்டியது, உறுப்பினர்களின் கடமையாக உள்ளதால், உரிய நிதியை இக்கூட்டத்திலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்கு அதிகாரிகள் நிதி இல்லை என்றும், வரும் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். மேலும் ஒன்றியக் குழு உறுப்பினர்களின் சம்மதம் இல்லாமல், தனிப்பட்ட ஒருவருக்கு ஆவின் பாலகம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளிநடப்பு செய்தனர். இதில் ஒன்றியக் குழு தலைவர் செந்தமிழ் செல்வி உள்ளிட்ட அதிமுக, திமுக, தேமுதிக, பாமக கட்சியை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்ததால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.