அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் -15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பொதுமக்கள் நலமுடன் வாழ, விழாவில் 18 நாட்கள் மகாபாரதம் படாப்பட்டது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவை முன்னிட்டு, 18 திரவியங்களால் திரெளபதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திரௌபதி அம்மன், பரிவாரங்களுடன் சிறுத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீக்குண்டத்தில்
விரதமிருந்துகாப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் ஆண்கள், பெண்கள், இளம்பெண்கள் என பலரும் தீமிதித்தனர், பெற்றோர்கள் சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீ மிதித்து நேர்த்திகடனை செலுத்தினர். தொடர்ந்து ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருவத்தூர், கீழமாளிகை, சேடக்குடிக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். செந்துறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.