பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும், ஊக்கத்தொகை, போனஸ் வழங்கிட கோரியும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் சார்பில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் உயர்த்தியும், பசும்பால் ரூபாய் 45 ம், எருமை பால் லிட்டருக்கு 54 ம் நிர்ணயம் செய்ய வேண்டும். பாலுக்கான ஊக்கத்தொகை, இதர மாநிலங்களில் வழங்குவது போல், லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 5 தமிழக அரசு வழங்கிட வேண்டும். தமிழகத்தில் ஆவினுக்கு சொந்தமான தீவன
ஆலைகளை, முழுமையாக இயக்கி 50 சதவீதம் மானிய விலையில் மாட்டு தீவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிட வேண்டும். வேளாண் விலைப் பொருட்களுக்கு விலை அறிவிப்பதை போல், ஒவ்வொரு ஆண்டும் பாலுக்கு விலையை அறிவிக்க வேண்டும். கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தில், மத்திய அரசு 50% ம், மாநில அரசு 30% ம், உற்பத்தியாளர்கள் 10 % என நிர்ணயிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் நபர்களை பதிவு செய்திட வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில், பாலையும், பால் சார்ந்த பொருட்களையும் வழங்கிட வேண்டும். அறிஞர் அண்ணா இன்சூரன்ஸ் திட்டத்தில் மாறுதல் செய்து, விபத்து மரணத்திற்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும். ஆவின் கொள்முதல் தினசரி ஒரு கோடி லிட்டராக உயர்த்திட வேண்டும். அதற்கான கட்டுமானத்தை உருவாக்கிட வேண்டும். தற்போது பாலின் தரத்தை கணக்கிட 8.2 எஸ்.என்.எஃப் (கொழுப்பு அல்லாத இதர சத்துக்கள்) மற்றும் 4.3 கொழுப்பு சத்து உள்ளதை மாற்றி, 8.0 எஸ்.என்.எஃப் 4.0 கொழுப்ப என கணக்கீட்டில் கொள்முதல் செய்ய வேண்டும்.
ஆரம்ப சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும். . செந்துறை அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் கூடுதலாக வருவதால், மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என கூடுதலாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.