அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் எடுக்கும் சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி இன்று துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா ஆதார் எடுத்தல் மற்றும் ஆதார் அட்டை பிழை திருத்தம் செய்யும் பணிக்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து இன்றையதினம்
அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளியில் பயிலும்; 30 மாணவிகளுக்கு ஆதார் எடுக்கும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி துவக்கி வைத்தார்.
மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளில் ஆதார் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது பயோமெட்ரிக் சாதனங்களை சரியான முறையில் பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் எனவும், மாணாக்கர்களின் விவரங்களை ஆதார் இணையதளத்தில் உள்ளீடு செய்யும் போது பிழைகள் ஏதுமின்றி சரியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜபிரியன், பள்ளி தலைமையாசிரியர் உமா, பள்ளி ஆய்வாளர் பழனிசாமி மற்றும் எல்காட் நிறுவன பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.