அரியலூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில், அரசு உதவி பெறும் ஆர் சி நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு அரியலூர் மாவட்டம் முழுவதும் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆர்.சி. நிர்மலா காந்தி பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பள்ளிக்கு அருகில் உள்ள தெருக்களின் மழை நீர் முழுவதும், பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகம்
இன்று ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை அளித்துள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை, பள்ளி ஆசிரியர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக, அரியலூர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளியின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்ததால், பள்ளி வளாகத்தில் தொடர்ந்து தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பள்ளி வளாகத்தில் தேங்கும் தண்ணீரை மாற்று பாதையில் திருப்பி விடவும், பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்திடவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.