அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தீண்டாமை ஒழித்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தபெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டு உணவருந்தினார்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார்.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலயங்கள் தோறும் அன்னதானம்
எனும் திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில் அன்னதானம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
அனைத்து மக்களும் சமம் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்து சமூக மக்களுக்கும் ஒன்றாக விருந்து அளிக்கும் நோக்கில் சமத்துவ விருந்து வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.விஜயபாஸ்கர், தனித்துணை ஆட்சியர் (ச.மூ.பா.தி) குமார், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.