அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சியில் ஒன்றிய சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் குழுமூர் முதல் அயன்தத்தனூர் கிராமம் வரையிலான 13 கிலோமீட்டர் தூரத்திற்கு மாவட்ட சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார். 8 கோடியே 79 லட்சம் மதிப்பிலான 13 கிமீ கிராம சாலையை மாவட்ட சாலையாக தரம் உயர்த்தும் பணியானது துவங்கப்பட்டுள்ளது. இச்சாலை வடிகால் வாய்க்கால் மற்றும் உயர்மட்ட பாலம் வசதியுடன் அமைக்கப்படுகிறது. சாலையினை மாவட்ட சாலையாக தர உயர்த்துவதன் மூலம் வங்காரம், அயன் தத்தனூர், குழுமூர், சித்துடையார், வஞ்சனாபுரம், நல்லநாயகபுரம், அங்கனூர், சோழங்குடிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் போக்குவரத்து வசதியும், விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும், சாகுபடிக்கான இடுபொருட்களை கொண்டு வரவும் இச்சாலை மிக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.