அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டடம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். மேலும், ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் இரண்டாம் கட்ட பணிகள், புதிய நகராட்சி அலுவலகம் அருகில் வாரச்சந்தை இரண்டாம் கட்ட பணிகளுக்கு வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இக்காணொளி காட்சி நிகழ்ச்சியில், அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகே கட்டப்பட்டுள்ள வாரசந்தையில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.2,465 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் 95 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, ரூ.2,058 கோடி மதிப்பீட்டில் 40 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.
அந்த வகையில் அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி, வார்டு எண்.18-ல், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தையினையும், அரியலூர் நகராட்சி வார்டு எண்.18, ஜெயங்கொண்டம் சாலை, கிராம நிர்வாக அலுவலகம் எதிரில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்
சார்பில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் என மொத்தம் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
மேலும் அரியலூர் நகராட்சியில் மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டட இரண்டாம் கட்ட பணிகளுக்கும், அரியலூர் புதிய நகராட்சி அலுவலகம் அருகில் மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் ரூ.98 இலட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை இரண்டாம் கட்ட பணிகளுக்கும் என மொத்தம் ரூ.4.76 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து அரியலூர் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்துப் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், நகர்மன்றத் துணைத் தலைவர் கலியமூர்த்தி, அரியலூர் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் விஜய்கார்த்திக், நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.