அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் சாலைகள் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதுல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.
குமிழியம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.148.62 இலட்சம் மதிப்பீட்டில் குமிழியம் முதல் ஜமீன்தத்தனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினையும், பின்னர், பாளையக்குடி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.137.74 இலட்சம் மதிப்பீட்டில் பாளையக்குடி முதல் சவருக்காடு வரை தார் சாலை அமைக்கும் பணியினையும், அதனைத் தொடர்ந்து, பெரிய ஆனந்தவாடி கிராமத்தில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கிழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினையும், பின்னர் சின்ன ஆனந்தவாடி கிராமத்தில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கிழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.5.43 கோடி மதிப்பீட்டிலான பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, செந்துறை ஒன்றியக்குழுத் தலைவர் தேன்மொழி சாமிதுரை, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர் உசைன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.