தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கயர்லாபாத் கிராமத்தில் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டச் செயல்முறை கிடங்கினை இன்று (20.02.2025) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 1,141 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட செய்யூர் – பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட 109 கிலோ மீட்டர் நீள செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலையினையும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 92 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள், 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்து, 10 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 6000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 கூடுதல் வட்ட செயல்முறை கிடங்குகளுக்கு இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்கள்.
அதன்படி அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கயர்லாபாத் கிராமத்தில் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் (2×1500) 3000 MT
கொள்ளளவு கொண்ட வட்டச் செயல்முறை கிடங்கினை சென்னை, தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, வட்டச் செயல்முறை கிடங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி குத்து விளக்கேற்றி வைத்து, கிடங்கினை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, துணைப் பதிவாளர் (பொ.வி.தி) சாய் நந்தினி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜா, கட்டுமானப் பிரிவு உதவி செயற்பொறியாளர் திரு. இளங்கோவன், இளநிலை பொறியாளர் பாபு, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.