அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் கீழையூரைச் சேர்ந்த தற்போது மலத்தான்குளம் வடக்கு தெருவில் வசிக்கும் அண்ணாசாமி என்பவருடைய மகன் பாலகிருஷ்ணன் (42) என்பவர் மீது கீழப்பழூர் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 01.11.2023ம் தேதி இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை வீட்டின் முன்பு அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கீழப்பழூர் காவல் நிலையத்தில் 02.11.2023ம் தேதி வழக்கு பதிவு செய்து, பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு அரியலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மேலும் பாலகிருஷ்ணன் வெளியே வந்தால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதால், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று, கீழப்பழூர் காவல் ஆய்வாளர் ராஜீவ்காந்தி கேட்டுக்கொண்டதன்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா மேல்பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, பாலகிருஷ்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணையிட்டுள்ளார். இதன்படி இன்று பாலகிருஷ்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கான ஆணை பிரதிகள் திருச்சி மத்திய சிறைத்துறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.