Skip to content

அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

  • by Authour

திருமானூர் டெல்டா பகுதிகளில், மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதியான திருமானூர் மற்றும் தா.பளூர் ஒன்றியத்தில் சுமார் 30000 ஹெக்டரில் சம்பா பயிராக நெல் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளைந்த நெல் பயிர்கள் சுமார் 10,000 மேக்டரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 20000 ஹெக்டர் பரப்பளவில் விளைந்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக திருமானூர் ஒன்றியத்தில் உள்ள வெங்கனூர், கரைவெட்டி, கோவில் எசனை, கள்ளூர், குந்தபுரம், கீழக்காவட்டாங்குறிச்சி, கீழக்கொளத்தூர், செங்கராயன்கட்டளை, மேலவரப்பன்குறிச்சி, ஏலாக்குறிச்சி, திருமானூர், பாளையபாடி, அரண்மனைக்குறிச்சி, திருமழபாடி, இலந்தைக்கூடம், சேனாபதி, முடிகொண்டான் உள்ளிட்ட பல கிராமங்களிலும் புதன் கிழமை பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து வயலிலேயே மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தற்போதைய சூழலில் ஏற்கெனவே பெய்த வடகிழக்கு பருவமழையால் மகசூல் இழப்பு ஏற்பட்டு ஏக்கருக்கு 10-15 நெல் மூட்டைகள் அறுவடை ஆன 10 சதவீதம் நெல் வயல்கள் போக மீதம் 80 முதல் 90 சதவீத நெல் வயல்களில் இன்னும் அறுவடை ஆகவில்லை . அறுவடைக்கு தயாராக தண்ணீரினை வடித்து வைத்து விவசாய நிலங்கள் மழை பெய்து நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்கவும் இயலாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் கால்நடைகளுக்கு நனைந்த வைக்கோலால் கால்நடைகளுக்கான உணவும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகுந்த கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம் கூறுகையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க, தமிழக அரசு கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி தமிழக அரசு தமிழக விவசாயிகளுக்கான காப்பீட்டு திட்டத்தை தனியொரு விவசாயி பாதித்தாலும் பாதிப்புக்கு ஏற்றவாறு இழப்பீடு கிடைக்கும் வகையில் புதிய பயிர்க்காப்பீட்டு திட்டத்தை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

error: Content is protected !!