போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்றையதினம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியில் கலந்துகொண்டோர் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு, மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர், இளம் பருவத்திலேயே மது அருந்துவதை தவிர்த்தல் போன்ற குடியினால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை இப்பேரணி சென்று முடிவடைந்தது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியின் மூலம் பொதுமக்கள் உரிய விழிப்புணர்வு பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.
இப்பேரணியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு) சத்தியபாலகங்காதரன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, வட்டாட்சியர் (கலால்) முத்துகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.