அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியல் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை பொதுமக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின்கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன்; ரூ.1,000 ரொக்கப்பணம் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை நியாயிவிலைக்கடையில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கி, இத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்கள்.
அதன் தொடர்ச்சியாக, அரியலூர் மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் 2,47,523 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டு, துவக்க விழா கோவிந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாஜாநகரம் பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடையில் அரிசி பெறும் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் பொங்கல் பரிசுத் தொகுப்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை நியாய விலைக்கடைகளில் சுலபமாக பெற்றுக்கொள்ளும் வகையில் சம்மந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் மற்றும் மின்னணு குடும்ப அட்டையினை எடுத்துக்கொண்டு பொருட்கள் பெற்றுச் செல்ல நியாய விலைக்கடைக்கு வர வேண்டும். நியாய விலைக்கடைகளில் ஆண், பெண் தனி வரிசையாக நின்று பொருட்களை பெற்றுச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று நியாய விலைக்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே தங்களுடைய நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, துணைப்பதிவாளர் (பொ.வி.தி) அரியலூர் அறப்பளி, சரக துணைப்பதிவாளர் வாசுதேவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) இளங்கோவன், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத் தலைவர் அபிநயா இளையராஜா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.