அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சிவகுமார் (தலைமையகம்), விஜயராகவன்(மதுவிலக்கு அமலாக்க பிரிவு), அந்தோணி ஆரி (இணையவழி குற்றப்பிரிவு), மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் சங்கர் கணேஷ் (அரியலூர் உட்கோட்டம்), தமிழ்மாறன் (மாவட்ட குற்றப் பதிவேடு கூடம்)ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தை விபத்துல்லா மாவட்டமாக மாற்றும் இலக்கை முன்னிறுத்தி பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
சிமெண்ட் ஆலை கனரக வாகனங்கள் ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை முழுமையாக மதித்து வாகனத்தை இயக்க வேண்டும், அரியலூர் மாவட்டத்தில் கனரக வாகன இயக்க நேர கட்டுப்பாட்டை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும், போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் வாகனத்தை இயக்கக் கூடாது, அனைத்து வாகனங்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும்,GPS கருவி பொருத்தப்பட வேண்டும், வாகனத்தில் அதிக பாரம், அதிக உயரம் ஏற்றக்கூடாது, கண்டிப்பாக தார்ப்பாய் கட்டிருக்க வேண்டும், அரியலூர் ,ஜெயங்கொண்டம் நகர பகுதி மற்றும் மக்கள் நடமாட்ட உள்ள பகுதிகளில் குறிப்பிடப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும். தினம் தோறும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தை விபத்துல்லா மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். வாகனத்தை அதிவேகமாகவும், அச்சுறுத்தும் வகையிலும், செல்போன் பேசிக் கொண்டும், மற்றும் மது அருந்தி வாகனத்தை இயக்குவது முற்றிலும் குற்றமாகும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் வாகனம் கைப்பற்றப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் கூறினார்.
போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் கார்த்திகேயன் (அரியலூர்), மதிவாணன் (ஜெயங்கொண்டம்), அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகர், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணபவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அரியலூர் கிளை மேலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் சிமெண்ட் ஆலைகளின் அலுவலர்கள், கனரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.