தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன்(68), இவருக்கு சொந்தமான 80 சென்ட் நிலம் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் இருந்தது. அந்த பகுதியில் தடுப்பணை கட்டும் பணி நடப்பதால், ஆடிட்டர் ரவிச்சந்திரன் நிலமும் தடுப்பணைக்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்கான கிரயத்தை அரசும் ஆடிட்டருக்கு கொடுத்து விட்டது.
இந்த நிலையில் தனது நிலத்தில்(அரசு கையகப்படுத்தியது) வளர்த்திருந்த 30 தேக்குமரங்களை ஆட்டிடர் ரவிச்சந்திரன் வெட்டி வாகனத்தில் லோடு ஏற்றினார்.
அப்போது அங்கு வந்த நீர்வளத்துறை அதிகாரிகள், அரசு கையகப்படுத்திய நிலத்தில் வெட்டிய மரங்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் ஆடிட்டர் மீது பந்தநல்லூர் போலீசில் புகாரும் செய்தனர்.
இதை அறிந்த, அரியலூர் மாவட்டம் திருமாந்துறையை சேர்ந்த நெப்போலியன்(45) (இவர் தர்மபுரியில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.) என்பவர் ஆடிட்டரை தொடர்பு கொண்டு, இந்த வழக்கில் இருந்து உங்களை தப்புவிக்க என்னால் முடியும். நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறேன்.
எனது உறவினர் தான் கலெக்டராக இருக்கிறார். உங்கள் மீது வழக்கு இல்லாமல் செய்யவேண்டுமானால் ரூ.1 கோடி கொடுங்கள் என்று கேட்டார். அதன்படி ஆடிட்டர் ரூ.1 கோடியை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியனிடம் கொடுத்தார். இந்த சம்பவம் 2020ல் நடந்துள்ளது.
அதன் பிறகும் ரவிச்சந்திரனிடம் மேலும் ரூ.1 கோடி பணம் கேட்டு நெப்போலியன் மிரட்டி உள்ளார். இதனால பொறுமையிழந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன், தஞ்சை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். எஸ்.பி. ராஜாராம் உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று இன்ஸ்பெக்டர் நெப்போலியனை கைது செய்தனர். நெப்போலியன் இதுபோல வேறு எங்கெல்லாம் மிரட்டி பணம் வாங்கினார். வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்து உள்ளாரா என போலீசார் விசாரிக்கிறார்கள்.
நெப்போலியன் இதற்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை செய்தாராம். அங்கு பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கியிருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.