Skip to content

30 நாள் குழந்தையை கொன்று புதைத்த தாய்-பாட்டி.. காரணம் என்ன?

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலசம்போடை கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் சித்திரைசோழன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு பரிமளா(48). என்ற மனைவியும் ஐந்து மகன்களும், நான்கு மகள்களும் சேர்த்து ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் மஞ்சுளா (18) திருமணமாகாமல் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மஞ்சுளாவின் பெற்றோர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த அன்புதுரையுடன் பழகியத்தையும், அதனால் தான் கர்ப்பமாகியதாகவும் மஞ்சுளா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மஞ்சுளாவின் தாய் பரிமளா புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கர்ப்பத்திற்கு காரணமாக மஞ்சுளா கூறிய அக்கிராமத்தை சேர்ந்த உத்திராபதி மகன் அன்புதுரை (21) மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச்மாதம் 29ம்தேதி மஞ்சுளாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட அன்புதுரை தரப்பில் பிறந்த குழந்தையை டிஎன்ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். குழந்தை பிறந்த செய்தி அறிந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் அண்மையில் தாய் மற்றும் குழந்தையின் அங்க அடையாளங்கள் பதிவு செய்து கொண்டு, திங்கள்கிழமை டி என் ஏ பரிசோதனைக்கு குழந்தையுடன் வரவேண்டும் என மஞ்சுளாவிடம் கூறி சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மஞ்சுளா குழந்தையின் தாய் மஞ்சுளாவும், பாட்டி பரிமளாவும் குழந்தையை காணவில்லை என அலறித்து அடித்துக் கொண்டு அழுதுள்ளனர். தனது குழந்தை கடத்தப்பட்டதாக அன்று இரவே மீன் சுருட்டி போலீசில் மஞ்சுளா புகார் அளித்தார். மேலும் அன்புதுரை தரப்பில் தனது குழந்தையை கடத்தி விட்டார்கள் என்றும் போலீசாரிடம் மஞ்சுளா கூறியுள்ளார்.
குழந்தை கடத்தப்பட்டதாக அளித்த புகாரின் பேரில், மீன்சுருட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மஞ்சுளாவின் வீடு மற்றும் பக்கத்து பக்கத்து வீடுகளில் போலீசார் விசாரணை செய்தில் வெளி நபர்கள் யாரும் அப்பகுதிக்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து குழந்தையின் தாய் மஞ்சுளாவை சந்தேகித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் டிஎன்ஏ பரிசோதனைக்கு பயந்து, மஞ்சுளாவே குழந்தையை கொன்று, வீட்டிற்கு முன் பகுதியில் உள்ள பெரிய மடையான் ஏரிக்கரையில் ஓரத்தில் பாத்திரம் கழுவுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிறியதாக குழி தோண்டி அதில் குழந்தையை புதைத்து விட்டு நாடகம் ஆடியது தெரியவந்தது. இந்த நிலையில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ரகுமான் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் குழந்தையை தோண்டி எடுத்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். குழந்தையை தாய் மற்றும் பாட்டி ஆகியோர் கொன்று புதைத்து விட்டு குழந்தையை காணவில்லை என நாடகமாடிய விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!