அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், “கலைஞர் நூற்றாண்டு விழாவினை” முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 25,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை துவக்கி வைத்து, 20,000 பனை விதைகள் நடும் பணிகளுக்கு பனை விதைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி அரியலூர் மாவட்டத்தினை பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் நாவல், ஒதியம், புங்கன், புலி, வேம்பு, மருது உள்ளிட்ட 25,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை துவக்கி வைத்து, 20,000 பனை விதைளை நடும் பணிக்களுக்காக பனை விதைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் வழங்கினார்.
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் பணியினை தொடங்கி வைத்திடவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் பணியாளர்களை கொண்டு நட்டு தொடர்ந்து பராமரித்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இவ்வகையான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு அரியலூர் மாவட்டத்தினை பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.இலக்குவன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், நகர்மன்றத் துணைத்தலைவர் கலியமூர்த்தி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா இளையராஜா, மாவட்ட நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.