அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நீட்டிப்பு செய்து துவக்கி வைத்து, கலைஞர் கனவு இல்ல வளர்ச்சித் திட்டப் பணியினை தொடங்கி வைத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அரியலூர் மண்டலம் சார்பில் 32 பருவ கால பணியாளர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கும் சாலை வசதிகள், பேருந்து வசதிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு கிராம பகுதிகளுக்கு பேருந்து
போக்குவரத்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நீட்டிப்பு செய்து துவக்கி வைத்து, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞர் கனவு இல்ல வளர்ச்சித் திட்டப் பணியினை தொடங்கி வைத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அரியலூர் மண்டலம் சார்பில் பருவ கால பணியாளர்கள் பணி ஆணைகளையும் வழங்கினார்.
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள (காத்தான்குடிகாடு) அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளின் கோரிக்கையினை ஏற்று, அரியலூர் முதல் கல்லூரி வரை காலை மற்றும் மாலை வேளைகளில் பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், செந்துறை ஒன்றியம், வாளரக்குறிச்சி ஊராட்சியில் அரியலூர் முதல் செந்துறை வரை செல்லும் பேருந்து சேவையை வாளரக்குறிச்சி
வரை நீட்டிப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செந்துறை ஒன்றியம், நல்லாம்பாளையம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் “கலைஞர் கனவு இல்லம் மாதிரி குடியிருப்பு” பணியினை துவக்கி வைத்தார்.
பின்னர், இரும்புலிக்குறிச்சி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று அரியலூர் – இரும்புலிக்குறிச்சி வரை மாலை நேரங்களில் கூடுதல் நடை பேருந்து இயக்கத்தினையும், அதனைத்தொடர்ந்து, பொன்பரப்பி ஊராட்சியில், பொன்பரப்பி – பெரம்பலூர் புதிய பேருந்து வழித்தடத்தினையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், தலையாரிக்குடிகாடு கிராமத்தில் அரியலூர் – ஆனந்தவாடி செல்லும் பேருந்து வழிதடத்தினை தலையாரிக்குடிகாடு வரை நீட்டிப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, செந்துறை ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அரியலூர் மண்டலம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரிய பருவகால பட்டியல் எழுத்தர்கள், பருவ கால உதவுபவர்கள் மற்றும் பருவ கால காவலர்கள் என 32 பணியாளர்களுக்கு பணி ஆணையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கங்காதாரிணி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட் திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துக்கிருஷ்ணன், கோட்ட மேலாளர் (பெரம்பலூர்) ஆர்.ராமநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர்உசைன், ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.