அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சலுப்பை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சத்திற்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததாக கூறப்படுகிறது.
இதில் சலுப்பை ஊராட்சிக்குட்பட்ட 4,5,6 ஆகிய வார்டுகளுக்கு பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு எந்த ஒரு பணிகளும் செய்யவில்லை என்றும், ரூ.40 லட்சத்தை திமுகவை சேர்ந்த ஊராட்சித் தலைவர் குழந்தைதெரசாஞானசேகரன் என்பவர் முறைகேடு செய்துள்ளதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி
சலுப்பை ஊராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது நீண்ட நேரம் ஆகியும் ஊராட்சித் தலைவர் வராததால் இதில் அதிருப்தியடைந்த பகுதி மக்கள் திடீரென ஊராட்சி அலுவலகத்தை பூட்டு போட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர். பொதுமக்கள் நடத்திய முற்றுகை போராட்டம் காரணமாக பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.