அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், திருச்சி மண்டலம் சார்பில் அரியலூர் – திருச்சி (1-1) இடைநில்லா பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அரியலூர் – திருச்சி (1-1) இடைநில்லா பேருந்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் – திருச்சி இடைநில்லா பேருந்து சேவையை தொடங்கி வைத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது,
அரியலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று அரியலூரில் இருந்து திருச்சிக்கு 1-1 இடைநில்லா பேருந்து சேவை இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ள சூழலில் இடைநில்லா பேருந்தின் மூலம் அரியலூரில் இருந்து திருச்சிக்கு வேலைக்கு செல்வோர் இனி விரைவாக செல்லமுடியும். அதன்படி காலை 6.12 மணிக்கு அரியலூரில் இருந்து புறப்பட்டு திருச்சியை சென்றடையும். திருச்சியிலிருந்து காலை 8.12 மணிக்கு புறப்பட்டு அரியலூரை வந்தடையும். மீண்டும் காலை 10.06 மணிக்கு அரியலூரில் இருந்து புறப்பட்டு திருச்சியை சென்றடையும். திருச்சியிலிருந்து பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு அரியலூரை வந்தடையும். மீண்டும் பகல் 1.45 மணிக்கு அரியலூரில் இருந்து புறப்பட்டு திருச்சியை சென்றடையும். திருச்சியிலிருந்து மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு அரியலூரை வந்தடையும். மீண்டும் மாலை 5.41 மணிக்கு அரியலூரில் இருந்து புறப்பட்டு திருச்சியை சென்றடையும். திருச்சியிலிருந்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு அரியலூரை வந்தடையும் வகையில் தினசரி 8 நடை இயக்கப்படும். எதிர்காலத்தில் கூடுதல் தேவை இருப்பின் கூடுதல் பேருந்து இயக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகத்தான திட்டமான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் 440 கோடி இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநில திட்டக்குழு ஆய்வறிக்கையில் சராசரியாக ரூ.900 ஒரு பெண்ணுக்கு மிச்சமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு இதனை விட அதிகமான தொகை மிச்சமாகிறது. இத்தொகையானது தங்களது குடும்ப தேவைகளுக்கு பேருதவியாக இருப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக 50 இலட்சம் பெண்கள் கட்டணமில்லா பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் வெற்றி என்பது கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில்
அந்தந்த அரசுகளில் இத்திட்டம் அமல்படுத்தியதிலிருந்தே தெரியவரும். எனவே, இத்திட்டம் இந்தியா முழுவதும் ஒரு வழிகாட்டுகின்ற திட்டமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 2000 பேருந்துகள் வாங்குவதற்கு மாநில அரசு நிதியிலிருந்து வழங்கியுள்ளார்கள். ஜெர்மன் வங்கி உதவியுடன் 2200 பேருந்துகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 4200 பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு அதில் 300 பேருந்து பழைய பேருந்துகளை மாற்றி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதேபோன்று இந்தாண்டு 3000 பேருந்துகள் வாங்க நிதிநிலை அறிக்கையில் தெரிவித்து நிதி ஒதுக்கி அதற்கான டெண்டர்களும் விடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடுவதை குறைக்கும் வகையில் பேட்டரியில் இயங்குகின்ற பேருந்துகளை அறிமுகப்படுத்துகின்ற திட்டத்தின் அடிப்படையில் 500 பேருந்துகள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 100 பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்த 400 பேருந்துகளுக்கும் டெண்டர் விட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட் கோட்ட மேலாளர் (பெரம்பலூர்) ஆர்.ராமநாதன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், வட்டாட்சியர் அரியலூர் ஆனந்தவேல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.