Skip to content

அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (05.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, சுமார் 42 வருடங்களுக்கு மேல் ஆனதாலும், பயன்படுத்த இயலாத நிலையில் இருந்ததன் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த 2023 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அதன்படி புதிய பேருந்து நிலையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் முதற்கட்டமாக உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் 21 பேருந்து நிறுத்த தடங்கள், 30 கடைகள், நிர்வாக அறை, உணவகம், நேரக்கட்டுப்பாட்டு அறை, டிக்கெட் புக்கிங்க கவுண்டர், ஏ.டி.எம் அறை, போக்குவரத்து துறை அலுவலக அறை, எலக்ட்ரிக்கல் அறை, பாதுகாப்பு அறை கட்டுப்பாட்டு அறை, கழிவறை உள்ளிட்ட பணிகளும், இரண்டாம் கட்டமாக மூலதன மான்யநிதி 2023-24 திட்டத்தின் கீழ் ரு.3.78 கோடி மதிப்பீட்டில் 6 பேருந்து நிறுத்த தடங்கள், 15 கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, நேரக்கட்டுப்பாட்டு அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கழிவறைகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேருந்து நிறுத்தம் தடம், கடைகள், நிர்வாக அறை, உணவகம், டிக்கெட் புக்கிங்க கவுண்டர், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், நேரக்கட்டுப்பாட்டு அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கழிவறைகள், இருசக்கர வாகனங்கள் காப்பகம் அமையவுள்ள இடம் உள்ளிட்ட கட்டடங்களின் கட்டுமான பணிகளை இன்றையதினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விவரம்

குறித்து ஆய்வு செய்ததுடன், முதற்கட்ட பணிகளில் 90 சதவீதம் பணிகள் முடிவுற்ற நிலையில் ஏனைய பணிகளான பேருந்து நிறுத்தம் இடம், நிழற்குடை, மின் பணிகள், குடிநீர் மற்றும் தண்ணீர் வசதிகள், சாலை மற்றும் வண்ணப்பூச்சு ஆகிய பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்திடவும், இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் பணிகளில் 90 சதவீதம் பணிகள் முடிவுற்ற நிலையில் ஏனைய பணிகளான விரைவாக உரிய காலத்திற்குள் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, அரியலூர் நகராட்சியில் உள்ள வண்ணான் குட்டையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், செட்டி ஏரியிலிருந்து வண்ணான் குட்டை ஏரிக்கு வரும் நீர்வரத்து பாதைகள், நீர் வெளியேறும் பாதைகளை கண்டறிந்து தூர்வாரி சீரமைக்கவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தினார். மேலும், வண்ணான் குட்டை பகுதிக்கு அருகில் உள்ள இடங்கள் குறித்து வருவாய் துறையினர் மூலம் ஆய்வு மேற்கொள்ள அரியலூர் நகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜன், அரியலூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், அரியலூர் நகராட்சி பொறியாளர் விஜய்கார்த்திக், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள், மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!