அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், மருவத்தூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45.06 கோடி மதிப்பீட்டில் மருவத்தூர் முதல் பொன்பரப்பி வரை 6 கி.மீ நீளத்திற்கு இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடத்தை இணைக்கும் வகையில் இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக தரம் உயர்த்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், மருவத்தூர் கிராமத்தில் அரியலூர் நெடுஞ்சாலைக் கோட்டத்தில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45.06 கோடி மதிப்பீட்டில்
அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை (வழி) செந்துறை (மா.நெ.217) கி.மீ 24/0 -30/0 வரை இருவழித்தடத்தை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், கல்வெர்ட் அகலப்படுத்துதல் மற்றும் திரும்ப கட்டுதல், வடிகால் கட்டுதல், தடுப்புச் சுவர், மையத்தடுப்பான் மற்றும் பேருந்து ஒதுங்கு தளம் அமைக்கும் பணியினை பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து, மேலும், சாலை ஓரத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்.
மேலும், இச்சாலை மேம்படுத்துவதன் மூலம் செந்துறை, மருவத்தூர், பொன்பரப்பி, மருதூர், வாரியங்காவல், இலையூர், செங்குந்தபுரம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள். எனவே, இச்சாலை பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து சாலையின் இருபுறமும் தற்போது உள்ளது போல் பசுமையான மரங்களை நட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர்விக்னேஷ்ராஜ், செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.