அரியலூர் மாவட்டம் பூவந்திக்கொல்லை கிராம ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள பூவந்திக்கொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மஹா மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 12 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் ஜூர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு ஊர் மக்கள் முன்வந்து கடந்த 19ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழாவை தொடங்கினர். அதனை தொடர்ந்து நவகிரக
ஹோமம், தனபூஜை, வாஸ்து சாந்தி மற்றும் பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. மூன்றாம் யாகசாலை பூஜை செய்து மங்கள மேள வாத்தியத்துடன், கடம் புறப்பாடு நடைபெற்று, கோவிலை வலம் வந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. திரண்டு இருந்த பக்தர்கள் அம்மன் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோட்டியால், பூவந்திக்கொல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிராம நாட்டாமைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்