அரியலூர் வழக்கறிஞர்கள் சங்க அவசரக் கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கதிரவன், துணைச்செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்ட திருத்தங்களை, ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த கோரியும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும், அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகின்ற 1ம் தேதி திங்கள் கிழமை, நீதிமன்ற வளாகம் முன் அடையாள உண்ணாவிரதமும், 2ம்தேதி செவ்வாய்க்கிழமை தபால் நிலைய முற்றுகை போராட்டமும், 3ம்தேதி புதன்கிழமை திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், அரியலூர் மாவட்டம் மனகெதியில் உள்ள சுங்கச்சாவடி முற்றுகை போராட்டமும்,
4ம்தேதி வியாழக்கிழமை தொலைத்தொடர்பு அலுவலகம் முன் முற்றுகை போராட்டமும், 5ம்தேதி வெள்ளிக்கிழமை அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் முற்றுகை போராட்டமும், 6ம்தேதி சனிக்கிழமை ஜிஎஸ்டி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் போராட்டம் நடைபெறும் நாட்களில், வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்றும், 8ம்தேதி திங்கள் கிழமை மீண்டும் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் கூட்டப்பட்டு மேல் நடவடிக்கை சம்பந்தமாக முடிவெடுப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.