தென்னகத்து திருப்பதி என்று அழைக்கப்படும் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமி அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். இந்த ஆண்டின் பெருந்திருவிழா இன்று துவஜாரோகணம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஊர்வலமாக கோவிலை சுற்றி வலம் வந்தார். அருள்மிகு வரதராஜ பெருமாளுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. ஆண்டு திருவிழாவின் ஒவ்வொரு நாளும் வரதராஜ பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9ஆம்நாள் திருவிழா,
வருகின்ற 25ந்தேதி அதிகாலையில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத வரதராஜ பெருமாள் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறவுள்ளது. அடுத்த நாள் வரதராஜ பெருமாளின் ஏகாந்த சேவை நடைபெறுகிறது. இத்திருவிழா காலங்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் புராதான நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இக்கோவில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையை முன்னிட்டு தங்கும் இடவசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, அன்னதானம் போன்ற வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது.
மேலும், பக்தர்களின் வருகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விழாக்கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.