அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசிமகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட காளைகளும், 200 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டியை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர். இதனையடுத்து வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர். சில காளைகள் தங்களை தொட்டுப்பார் என்று சவால் விடுத்து களத்தில் சீறிப்பாய்ந்து தாங்கள் நிகரற்றவர்கள் என நிரூபித்தன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,
அடங்காமல் சீறி பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் விழா குழு சார்பில் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கால்நடை மருத்துவர் குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதித்த பின்னரே களம் காண அனுமதித்தனர் இதுபோன்று காயம் அடைந்த வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அளிக்கப்பட்டது. அசம்பாவித சம்பங்களை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.