அரியலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி இவர், நேற்று வெங்கனூர் சுடுகாடு அருகே கழுத்தின் பின்பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார். இதுதொடர்பாக வெங்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், ராசாத்திக்கும், அவரது கொளுந்தனார் நாகராஜிக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, ராசாத்தி வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த எனது அண்ணன் முனியப்பனை முதலில் திருமணம் செய்துகொண்டார். அவர், சில மாதங்களில் இறந்து விட்டதால், இரண்டாவதாக ராமகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராமகிருஷ்ணனும் உயிரிழந்த நிலையில், ராமகிருஷ்ணன் குடும்பத்தின் மீது ராசாத்தி ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்குக்காக ரூ.1.50 லட்சம் பணம் செலவிட்டேன். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து, ராமகிருஷ்ணன் குடும்பத்தினர், ராசாத்திக்கு ரூ.11லட்சம் ஜீவனாம்சம் கொடுத்தனர்.
இதையடுத்து நான் செலவு செய்த ரூ.1.50 லட்சத்தை தரக்கோரி ராசாத்திடம் பலமுறை வலியுறுத்தியும் தரவில்லை. இந்நிலையில், நேற்று ராசாத்தி வயலுக்கு கூலிக்கு களை பறிக்க சென்றுவிட்டு திரும்பி வருகையில் வழிமறித்து பணத்தை கேட்டேன், அப்போது தர மறுத்து தகராறில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினேன் என தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து நாகராஜை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.