அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தின் வயல் பகுதியில் திருமழபாடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உரிமம் பெற்று கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இங்கு 4 ஷெட்கள் அமைக்கப்பட்டு அதில் உள்ள 7 அறைகளில் நாட்டு வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் தஞ்சாவூர் – அரியலூர் சாலையில் இவருக்கு சொந்தமான பட்டாசு கடையும் உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதமேஉள்ள நிலையில், இந்த ஆலையில் வெடி தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. சிவகாசி, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, விரகாலூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வந்தனர்.
நேற்று காலை 9.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. சுமார் 3 கி.மீ. சுற்றளவுக்கு இந்த வெடி சத்தம் கேட்டது. அடுத்த சில விநாடிகளுக்கு அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்த தகவல் அறிந்ததும், அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், திருவையாறு, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள், 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள், கீழப்பழுவூர், திருமானூர் போலீஸார் மற்றும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி, அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. தீ ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, நண்பகல் 12 மணிக்கு மேல் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டு, அரியலூர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் விருதுநகரை சேர்ந்த சீனு (21), பன்னீர்செல்வம் (55), அரியலூர் மாவட்டம் விரகாலூர் அண்ணா நகர் ரவி (45), இவரது மனைவி சிவகாமி (38), ராசாத்தி (50),வெண்ணிலா (48), திருச்சி மாவட்டம் குமுளூர் அறிவழகன் (56), தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி சிவக்குமார் (38), திருவலஞ்சுழி ஆனந்தராஜ் (50), அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமம் சின்னதுரை (55), தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருமானூர் முருகானந்தம் (20) ஆகிய 11 பேர் உயிரிழந்தனர். உடனடியாக அவர்களது உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு இரவோடு இரவாக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ஏற்பாட்டின் பேரில் இறந்தவர்களின் வீடுகளுக்கு
விபத்து நடந்த இடத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சிவகாசியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சில பட்டாசு ரகங்கள் கொண்டு வரப்பட்டு குடோனில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் வெடித்து சாம்பலாகின. விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த டிரைலருடன் கூடிய டிராக்டர், ஒரு வேன், 8 இருசக்கர வாகனங்கள் ஆகியவையும் எரிந்து நாசமாகின.
விபத்து நடந்த இடத்துக்கு மாவட்டஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வந்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். அரியலூர் அதிவிரைவு படை, ஆயுதப் படை காவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்து தொடர்பாக பட்டாசு ஆலைஉரிமையாளரான திருமழபாடி ராஜேந்திரன் (55), ஆலையை நிர்வகித்து வரும் அவரது மருமகன் அருண் (40) ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 7 பேருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 7 பேருக்கு தலா ரூ.50 ஆயிரத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன் ஆகியோர் வழங்கினர்.இறந்தவர்களின் குடும்பத்துக்கு இன்று வழங்கப்படும்.
விபத்து குறித்து அங்கு பணியில் இருந்து உயிர் தப்பிய தொழிலாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
விபத்து நடந்தபோது நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் நாங்கள் அப்படியே தப்பி ஓடிவிட்டோம். விபத்து நடந்த இடத்தில் 4 ஷெட்கள் அமைக்கப்பட்டு வெடி தயாரிக்கப்பட்டது. 4 ஷெட்களிலும் 7 அறைகள் இருந்தது. விபத்து நடந்த அறை உள்ள அந்த பகுதியே தரைமட்டமாகி விட்டது. அங்கு இருந்த அனைவரும் இறந்து விட்டனர்.
எனவே விபத்துக்கான காரணத்தை பார்த்தவர்கள் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் வெயில் வெப்பம், பேக்கிங் அழுத்தம் ஆகியவற்றால் வெடிக்கும். இன்னொன்று, பேக்கிங்கை தூக்கி செல்லும்போது தவறி விழுந்து விட்டாலும் வெடிக்கும். இது தவறி விழுந்து வெடித்திருக்கும் என்று தான் எண்ணத்தோன்றுகிறது. மொத்த வெடியும் வெடித்தது போல பயங்கர சத்தம் கேட்டதால் பேக்கிங் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறேன் என்றார்.