விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா, உபி மாநில விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராடும் விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. இதில் ஒரு விவசாயி பலியாகி விட்டார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது நடத்தப்படும் தாக்குதலை
கைவிட வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் உள்ள சேனாபதி கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் 2 விவசாயிகள் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விஞ்ஞானி நம்மாழ்வார் அகில இந்திய மக்கள் சேவை நிறுவனத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம், மற்றும் அவரது ஆதரவாளர்வேலுமணி ஆகிய இரண்டு பேரும் செல்போன் டவர் மேல் ஏறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனால் திருமானூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேனாபதி கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலையின் அருகில் உள்ள செல்போன் டவர் மேல் ஏறி உள்ள இருவரும் டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அங்கு நடக்கும் துப்பாக்கி சூட்டை கண்டித்தும் மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் குரல் எழுப்பி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சண்முகசுந்தரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும் காலை 10.30 மணி வரை போராட்டம் நீடித்துக்கொண்டு இருக்கிறது.