அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதி விவசாயிகள், நடப்பு சம்பா பருவத்தில் அம்மன் பொன்னி சாகுபடி செய்திருந்தனர். இந்த விதைகளை கிலோ ரூ.150 ரூபாய்க்கு திருச்சி, புள்ளம்பாடி பகுதி யில் இருந்து தனியாாரிடம் வாங்கி உள்ளனர். இந்த விதைகளின் காலம் 110 நாட்கள்.
ஆனால் நடவு செய்த 20 முதல் 30 நாட்களில் நெற்பயிரில் கதிர் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து அறுவடை பருவத்தை எட்டி விட்டது எனவும் உடனடியாக விவசாயிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை அடுத்து வேளாண் அதிகாரிகள்
ஆய்வுக்கு வந்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்திருந்த பயிர்களை காட்டினர். அப்போது தான் விவசாயிகள் வாங்கியது தரமற்ற விதைகள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தரமற்ற விதைகளை உற்பத்தி , மற்றும் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் செலவு செய்த நிலையில் பயிர் வீணாகி விட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மேலும் இதுகுறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் அதிகாரிகளிடம் கூறும் போது வேளாண்துறை சார்பில் விதைகளை நடமாடும் விதை வழங்கும் பணிகள் மூலம் விதைகளை வழங்கிட நடவடிக்கைகள் எடுத்திருந்தால் விவசாயிகள் தனியாரிடம் விதைகளை வாங்கி இருக்க மாட்டார்கள். கடந்த ஆண்டும் இதே தனியார் விநியோகம் செய்த அம்மன் பொன்னி விதைகள் குறைந்த நாட்களில் அறுவடைக்கு வந்து ஏக்கருக்கு 10 மூட்டை மட்டுமே கிடைத்தது மகசூல் இழப்பை ஏற்படுத்தியது இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பேசியதனையும் குறிப்பிட்டார்.
போலி விதையால், கரைவெட்டி கிராமத்தில் 150 ஏக்கரும் வெங்கனூர் பகுதிகளில் 100 ஏக்கருக்கும் மேலாகவும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் அழகு கண்ணன் திருமலைவாசன் , திருச்சி மாவட்டம் விதை சான்று துறையைச்சார்ந்த விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜேஸ்வரி விதை ஆய்வாளர்கள் சேகர் மோகன்தாஸ் சிவக்குமார் விதை சான்று அலுவலர் ராமலிங்கம் வேளாண்மைதுறை இணை இயக்குநர் கீதா, உள்ளிட்டோர் இந்த ஆய்வு பணியை செய்தனர். போலி விதைகள் உற்பத்தி செய்வோர், விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அதிகாரிகள் கூறினர்.