அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் அம்மனை வேண்டி பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். தினந்தோறும் பஞ்சபாண்டவர்கள் கதை படிக்கப்பட்டு, தர்மர் பிறப்பு, அம்மன் பிறப்பு, வில்வளைப்பு, திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், அரவான் களப்பளியிடுதல், கர்ணமோட்சம் என்று வரலாறு சிறப்புமிக்க நிகழ்வுகள் நடத்தப்பட்டது. மக்கள் நலமுடன் வாழ 18 நாட்கள் மகாபாரதம் படாப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவை இன்று நடைபெற்றது. அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால்
அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட திரௌபதி அம்மன், பரிவாரங்களுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . பின்னர் மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதி வழியாக பக்தர்கள் வலம் வந்தனர். திருத்தேர் தீமிதி நடைபெறும் இடத்திற்கு வந்துடைந்து பின்னர், அம்மன் முன்னிலையில், காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், இளம்பெண்கள் என அனைவரும் தீமிதித்தனர், பெற்றோர்கள் சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பொன்பரப்பி, மருதூர், வாரியங்காவல், சிறுகளத்தூர், மருவத்தூர், கீழமாளிகை, சேடக்குடிக்காடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் அம்மனை வழிபாட்டு சென்றனர். செந்துறை காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.