திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் M.மனோகர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உடன் இருந்தார். மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் தனிப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட குற்ற பதிவேடு கூடம் போன்ற சிறப்பு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஆய்வின்போது, காவல்துறையில் உள்ள சிறப்பு பிரிவில் பராமரிக்க வேண்டிய சாலை விபத்துக்கள் எண்ணிக்கை, அதில் ஏற்படும் உயிரிழப்புகள், காயங்கள், போக்குவரத்து விதி மீறிய குற்ற வழக்குகள், மாவட்டத்தில் நடக்கும் திருட்டு வழிப்பறி சம்பவங்கள் அவற்றில் ஏற்படும் இழப்புகள், மீட்கப்பட்ட விவரங்கள், கொலை எண்ணிக்கை அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது விவரங்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்
விற்றது, கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்றது, கள்ளச்சாராயம் விற்பனை, சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை வாங்கி விற்பது, அவற்றில் பறிமுதல் செய்யப்பட்ட, கைது செய்யப்பட்ட விவரங்கள், தடை செய்யப்பட்ட லாட்டரி வழக்கு, போக்சோ வழக்குகள், குற்ற வழக்குகளிலும் மது வழக்குகளிலும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு வழக்குகளின் விபரங்கள் குறித்து ஆய்வு செய்ததோடு அவற்றை பராமரிக்க தேவையான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும் ஆய்வின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் (தலைமையிடம்), தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி, தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.