தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் கீழ் 123 வது சட்டமன்ற தொகுதியாக ஜெயங்கொண்டம் தொகுதிகுட்பட்ட விளந்தை ஊராட்சியில் ஒரே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டு மைதானம் மேம்பாட்டிற்கும், பள்ளி வளாக மேம்பாட்டிற்கும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், அப்பள்ளிகளில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கட்டடங்களின் நிலை குறித்து கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலரிடம் அறிவுறுத்தினார். மேலும், கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாணவர்களின் பாடப்புத்தகத்தினை வாசிக்க சொல்லி அவர்களின் வாசிப்புத் திறனை ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்தரையாடி பொதுதேர்விற்கு நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரவேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் எனவும், பாடங்களில் சந்தேகங்கள் ஏற்படும் போது ஆசிரியர்களிடம் தயங்கமால் கேட்டு அதனை தெளிவுபடுத்திக் கொள்ள
வேண்டும் எனவும், பொது தேர்வு குறித்து எந்தவித அச்சமும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில்தான் அரையாண்டு தேர்வுகளிலேயே முழுபாடத்திட்டங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும் திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. எனவே பொது தேர்வினை சிறப்பான முறையில் எழுதி நல்ல கல்லூரியில் சேருவதை மட்டுமே இலக்காக கொள்ளவேண்டும் எனவும், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது விளந்தை அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ்முருகன், விளந்தை அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்(பொ) அபிலா, பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.