அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தலைமையில் இன்று (13.04.2023) நடைபெற்றது.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாளாக கொண்டாடிட தமிழ்நாடு முதலமைச்சரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி,
சமத்துவ நாள் உறுதிமொழியான சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய
சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி உறுதிமொழியினை வாசிக்க, அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட ஆட்சியரக மேலாளர்(பொது) குமரையா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.