அரியலூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள், கிராம செயலகக் கட்டடங்கள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், பொது விநியோக கடை கட்டடங்கள் மற்றும் உணவு தாணிய கிடங்கு கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
இக்காணொளி காட்சி நிகழ்ச்சியில், இடையத்தாங்குடி ஊராட்சி, வைப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் இரண்டு வகுப்பறை கட்டடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள், கிராம செயலகக் கட்டடங்கள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், பொது விநியோக கடை கட்டடங்கள் மற்றும் உணவு தாணிய கிடங்கு கட்டடங்கள் என 37 கட்டடங்கள் திறந்து
வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இடையத்தாங்குடி ஊராட்சி, வைப்பம் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் இரண்டு வகுப்பறை கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்துப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) சுவாமி முத்தழகன், வட்டாட்சியர் ஆனந்தவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், இடையத்தாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்