அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டு வந்தது. மேலும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை இல்லாத நிலையே இருந்து. இந்நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு மேல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. தா .பழூர், மீன்சுருட்டி, உடையார்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மிதமானது முதல் கன மழை
பெய்து வருகிறது. இம்மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மாணவாரியில் சாகுபடி செய்துள்ள முத்துசோளம் அறுவடை செய்து வரும் நிலையில் மழையின் காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட முத்துசோளத்தையும் காய வைக்க முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதேபோல் சம்பா நெல் நடவு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்பொழுதும் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.