அரியலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் ஊட்டச்சத்து இருவார விழா-2024 பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் ஊட்டச்சத்து இருவார விழா-2024 பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் பப்பாளி, முருங்கை வளர்த்திடுவோம், பாங்காய் உயிர்சத்து “A” வை பெற்றிடுவோம், தாய்பால் தொடர்ந்து தருவதாலே புற்றுநோய்களும் வராதே!, தடுப்போம் தடுப்போம் இரத்த சோகையை தடுப்போம், ஊட்டச்சத்துடன் இருந்திடு உன் உடல்நலத்தை காத்திடு, பயிர்க்கு தேவை உரச்சத்து மனிதனுக்கு தேவை ஊட்டச்சத்து, வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு, அறிந்திடுவோம் அறிந்திடுவோம் இரத்த சோகை நீங்க சத்தான உணவை அறிந்திடுவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர். இப்பேரணியில் சுமார் 150 நபர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இப்பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பல்துறை அலுவலக வளாகம், அரியலூர் நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரியலூர் அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலர் அன்பரசி. வட்டார அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.