அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 57 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் 16 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் மகளிர் மற்றும் பொதுமக்கள்; முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள், உதவித்தொகைகள், நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரியலூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் துணி
வியாபாரம், மருத்துவ கடை, தையல் தொழில், பூக்கடை, பெட்டிகடை உள்ளிட்ட தொழில்களை மேற்கொள்ள ஏதுவாக 24 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000-க்கான காசோலை என மொத்தம் ரூ.2,40,000 மதிப்பீட்டில் காசோலைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சேர்ந்த 33 பயனாளிகளுக்கு தலா ரூ.5,034 மதிப்பில் என மொத்தம் ரூ.1,66,122 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
மேலும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 16 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உமாமகேஷ்வரன் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.