Skip to content

கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன வசூல் அலுவலர் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கணவன் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கஞ்சனூர் மேலவீதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சிவா (30). இவர் நிதி நிறுவனம் ஒன்றில் வசூல்  செய்யும் வேலை செய்து வந்தார்.  கடந்த பிப்ரவரி 28ம் தேதி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி பகுதிக்கு வசூல் பணிக்காக சென்று வருவதாக கூறிச் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து  பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் கொடுத்தனர். இந்நிலையில் கோடாலி கிராமம் அருகில் உள்ள செங்கால் ஓடை அருகே பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று  கிடப்பதாக ஆடு மேய்ப்பவர்கள் தா.பழூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு உடலின் சில பாகங்களைத் தவிர முற்றிலும் எரிந்த நிலைகள் சடலம் ஒன்று கிடைப்பதை  பார்த்தனர்.   சடலத்தை கைப்பற்றி தீவிர ஆய்வு செய்ததில் கைவிரலில் அணிந்திருந்த  தங்க மோதிரம் மட்டும் அடையாளமாக காவல்துறையினருக்கு கிடைத்தது.

அருகிலுள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை சேகரித்த போலீசாருக்கு பந்தநல்லூர் காவல் நிலையத்தில் கோடாலி கிராமத்திற்கு செல்வதாக கூறி சென்ற  சிவா என்பவர் பற்றிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பந்தநல்லூர்

காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சிவாவின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு மேற்கொண்ட விசாரணையில் எரிந்த நிலையில் கடந்த உடலில் இருந்து எடுக்கப்பட்ட மோதிரம் சிவா அணிந்திருந்தது என்பதை  அவரின் உறவினர்கள் உறுதி செய்தனர்.

சிவாவின் உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், நிதி நிறுவனத்தில் சிவா கடைசியாக யாரிடம் வசூல் செய்ய சென்றார் என்ற  தகவலின் அடிப்படையிலும், தா பழூர்  காவல்துறையினர், கோடாலி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மகேஷ் (35) மற்றும் அவரது மனைவி விமலா (32) ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிடைத்த பல்வேறு தகவல்கள் போலீசாரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திட்டமிட்டு எரித்து படுகொலை செய்யப்பட்ட பின்னணியை அறிந்த போலீசார் திடுக்கிட்டு போயினர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சிவா பணிபுரியும் நிதி நிறுவனத்தில் கோடாலி கிராமத்தை சேர்ந்த மகேஷ் தனது வேறொரு நண்பர் மூலமாக நிதி உதவி பெற்று கார் வாங்கியுள்ளார். அந்த காருக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையை இரு மாதங்கள் மட்டுமே மகேஷ் செலுத்தியுள்ளார். அதன் பிறகு கடந்த நான்கு மாதங்களாக தவணைத் தொகை செலுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது.

தொடர்ந்து நான்கு மாதங்கள் தவணைத் தொகை செலுத்தாததால் நிதி நிறுவனத்தினர், சிவாவிடம் நிதி நிறுவனம் சார்பில் மகேஷிடம் நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொறுப்பை கொடுத்துள்ளனர். மகேஷிடம் நிதி நிறுவனத்திற்கு வரவேண்டிய நிலுவைத் தொகையான 52,000 ரூபாயை வசூல் செய்வதற்காக சிவா அடிக்கடி மகேஷிடம் பேசி வந்துள்ளார்.

சிவா அடிக்கடி மகேஷின் வீட்டிற்கும் சென்று நிலவைத் தொகையை கட்டி முடிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 28ம் தேதி இரவு மகேஷ், சிவாவுக்கு செல்போன் மூலம் அழைப்பு கொடுத்து, வீட்டிற்கு வந்து தொகையை வசூல் செய்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இதனை நம்பி இரவு 8 மணி அளவில் மகேஷின் வீட்டிற்கு சென்ற சிவா, தொகையை பெறுவதற்காக வீடு முன் காத்திருந்தார்.

அப்போது , மகேஷ் மறைத்து வைத்திருந்த கட்டையால் சிவாவை பின்னந்தலையில் தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த சிவா தடுமாறி விழுந்தவுடன், மகேஷின் மனைவி விமலா வீட்டிலிருந்து கடப்பாறையை எடுத்து வந்து, அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மகேஷின் அக்கா மகன் ராஜேஷிடம் (25) கொடுத்துள்ளார்.

மகேஷ் அக்காவின் 17 வயதுடைய இன்னொரு மகன் சிவாவை இறுக்கிப்பிடித்துக் கொண்டுள்ளார். ராஜேஷ் கடப்பாரையால் தொடர்ந்து சிவாவை அடித்து தாக்கியதில் சிவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து சிவாவின் கால்களை கயிற்றில் கட்டி சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து செங்கால் ஓடை பகுதிக்கு தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பனை ஓலை மற்றும் டீசல் ஆகியவற்றை பயன்படுத்தி சிவாவை யாருக்கும் தெரியாமல் அதிகாலை நேரத்தில் எரித்துவிட்டனர்.

பின்னர் எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து விட்டனர் என்று போலீஸ் விசாரணையில் மகேஷ் மற்றும் விமலா தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் மகேஷ் மற்றும் விமலாவை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் இவர்களோடு இணைந்து சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனையும் ராஜேஷையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, திரும்ப செலுத்தாத நிலையில், 52 ஆயிரம் ரூபாய்க்காக, கணவன் மனைவி அவர்களது உறவினர்களோடு சேர்ந்து  வாலிபரை அடித்து கொலை செய்து, எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!